Lost your password?...

நியூட்ரினோ-கருந்துளைகளின் தூதன்!!

–  முனைவர். செ. அன்புச்செல்வன் (இலந்தைமரத்தான்), மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom

நியூட்ரினோ என்பவை நியூட்ரான்கள் அல்ல. அண்டப்புறவெளியிலிருந்து பூமி நோக்கி வந்துகொண்டிருக்கும் கற்பனைக்கே எட்டாத மீச்சிறு வடிவிலான துகள்கள் தாம் நியூட்ரினோ.

ஒரேயொரு நொடிக்குள் ஒரு சதுரசெமீ அளவிலான பூமிப்பரப்பின் மீது கிட்டத்தட்ட 65 கோடி நியுட்ரினோத் துகள்கள் விழுகின்றன.

இவை மின்சுமையற்றதால் (Chargeless or Neutral) அயனியாக்கும் திறம் இல்லாதவை. மலையை, மரத்தை, குடியிருப்பை, கோபுரத்தை என்று யாவற்றையும் ஊடுருவிக்கொண்டு மண்ணில் விழுகின்ற ஒரு சுரணையற்ற, வினைத்திறம் குறைந்த மீச்சிறு துகள் தான் நியுட்ரினோ. ஆற்றல் மிக்க சில மின்காந்த அலைகளாலும் கூட இவற்றுக்கு ஏதும் நேராது. ஆகவேதான், நியுட்ரினோத் துகள்கள் நம் உடலை ஊடுருவிக் கொண்டுச் சென்றாலும் தீங்கேதும் நேர்வதில்லை.

எதிர்மின்துகள் எனப்படும் எலக்ட்ரானைவிட பலமடங்கு சிறியனவாக இருப்பதால் இதை நிறையில்லா அதாவது எடையற்றவை என்கிறார்கள் இயற்பியலாளர்கள்.

அப்புறம் எதற்காக நியுட்ரினோவை ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள் என்னும் கேள்வி நமக்கு எழுகின்றதல்லவா??.

No automatic alt text available.

அண்டமே பிண்டம்!! பிண்டமே அண்டம்!!

அதாவது நம் உடலாகிய பிண்டம் அண்டத்தின் பொருள்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நம் உடலானது எவ்வாறு அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோலவே இந்தப் பேரண்டமும் அணுக்களால் ஆனது.

இதை எளிதில் புரிந்துகொள்ள அணுவை இரண்டு பாகங்களாகக் கொள்வோம். அணுவை ஒரு கால்பந்தாக உருவகம் செய்துகொள்ளுங்கள் அதன் (நட்ட)நடுவில் ஒரு கடுகு இருப்பதுபோல (மிதப்பதுபோல) நினைத்துக் கொள்ளுங்கள்.

1. இங்கே கடுகுதான் உட்கரு, இதற்குள்ளேதான் நேர்மின்சுமையுடைய (+ ve Charged) புரோட்டான், மின்சுமையற்ற நியூட்ரான்கள், நியூட்ரினோ, மீசான்கள், பாசிட்ரான்கள், போஸான்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மீச்சிறு அணுத்துகள்கள் இருக்கின்றன.

2. கடுகு மிதந்து கொண்டிருக்கும் பெரும் வெறுவெளி (கால்பந்தின் காற்று அடைபட்ட பகுதி) யில் தான் எதிர்மின்சுமையுடைய (- ve Charged) எலக்ட்ரான்கள் (சூரியனைக் கோள்கள் சுற்றுவதைப் போல) கடுகை (உட்கருவை)ச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

3. கடுகு ஏன் மிதக்கவேண்டும்?? அது எப்படிப் பிடிமானம் இல்லாமல் நிலையாக அணுவின் நடுவில் இருக்கிறது என்று கேட்பீர்கள்.

கடுகு (உட்கரு) மிதப்பதற்குக் காரணம், கடுகுக்குள்ளே இருக்கும் நேர்மின்சுமைப் புரோட்டான்கள், கடுகுக்கு வெளிப்புறத்தில் வெகுவேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சம எண்ணிக்கையிலான எதிர்மின்சுமை எலக்ட்ரான்களை ஈர்ப்பதால் தான்.

இப்படிப்பட்ட கடுகு(உட்கரு)க்குள் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட துகள்களில் நியூட்ரினோ வும் ஒன்று. உலகில் பத்துக்கும் மேற்பட்ட (அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட) நாடுகளில் நியூட்ரினோ ஆய்வகங்கள் இருக்கின்றன.

இதுபோன்ற ஆய்வகங்களை அமைத்து, நியூட்ரினோ வின் பண்புகளை அறுதியிட முயல்வதால் இந்த அண்டப்பேரண்டத்தின் தோற்றத்தை அறிந்துகொள்ள முடியும். இந்தப் பேரண்டத்தைத் தம் பேராற்றலால் ஆட்டிவைத்துக் கொண்டிருப்பவை நம் பூமியிலிருந்து கோடானுகோடி ஒளி ஆண்டுத் தொலைவில் இருக்கின்ற கருந்துளைகள். நம் சூரியக் கோள்களடங்கிய பால்வெளி மண்டலத்தை எப்போது வேண்டுமானாலும் தம் அகன்ற வாய்க்குள் விழுங்கிவிடத் துடித்துக் கொண்டிருப்பவைகளும் இந்தக் கருந்துளைகளே!! இந்தக் கருந்துளைகளில் இருந்து வருகின்றவைகள்தாம் நியூட்ரினோத் துகள்கள் என்கிறார்கள் வானியல் வல்லுநர்கள். ஆகவேதான், நியூட்ரினோத் துகள்களை கருந்துளைகளிலிருந்து பூமிக்குத் தகவல் கொண்டுவரும் தூதர்கள் (Cosmic Messengers) என்றழைக்கிறார்கள். ஆகவே இந்தத் தூதர்களை ஆராய்ந்தால், கருந்துளை தொடர்பான அண்டத்தைப் பற்றியும், உலகம் பிறந்த கதையையும், நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், எப்போது உலகம் அழியக்கூடும் என்ற கேள்விக்கும், ஏன் கடவுள்தான் இவ்வுலகைப் படைத்தாரா என்ற கேள்விக்கும் விடை கிடைக்கக்கூடும். இன்னும் தகவல் தொடர்புகளில் எட்டாத தொலைவுகளை எட்டிப்பிடிக்கலாம்.

இதெல்லாம் சாமானியருக்குப் புரியுமா என்றால் புரியாதுதான்.

நியூட்ரினோ உலையால் தீங்கு நேருமா??

நியூட்ரினோத்துகளால் மனித உயிர்களுக்கோ, உயிரினங்களுக்கோ தீங்கு இருக்காது. ஏனென்றால் ஒவ்வொரு நொடிக்கும் கோடிக்கணக்கான நியூட்ரினோத் துகள்கள் நம் உடலை ஊடுருவிக்கொண்டுதாம் இருக்கின்றன.

ஆனால் நியூட்ரினோத் துகள்கள் மட்டும் வானிலிருந்து வருவதில்லை. கூடவே அலகிலா எண்ணிக்கையிலான அலைக்கற்றைகளை, மீச்சிறு துகள்களை சேர்த்துக்கொண்டுதான் பூமி மீது பாய்ந்து விழுந்துகொண்டு இருக்கின்றன. ஆகவே அவற்றிலிருந்து சுரணையற்ற, வினைத்திறம் குறைந்த நியூட்ரினோத்துகள்களை மட்டும் பிரித்தெடுத்து அதன் பண்புகளை அறுதியிட முயல்வதே நியூட்ரினோ ஆய்வகத்தின் வேலை ஆகும். அப்படி நூற்றுக்கணக்கான அலைக்கற்றைகளிலிருந்து நியூட்ரினோத் துகள்களை மட்டும் வடிகட்டிப் பிரித்தெடுக்கும் கருவிதான் “நியூட்ரினோ உலை” ஆகும்.

நூறு மீட்டர்களுக்கும் மேலான உயரமுடைய இந்த இரும்பிலான உலையை, மலையை மேலிருந்து செங்குத்தாக சில நூறு மீட்டர்கள் குடைந்து பின்னர் கிடைமட்டமாகவும் குடைந்து சுரங்கம் அமைத்து நிறுவுவார்கள். நியூட்ரினோ துகள்களை இரும்பு (மற்ற உலோகங்களைவிட) ஓரளவிற்கு ஈர்க்கவல்லது என்பதால் இரும்பாலான பட்டைகளை ஈர்ப்பானாகப் பயன்படுத்துகின்றனர். அதோடு இந்த ஈர்ப்புவினைக்கு அதிக காந்தப்புலம் தேவைப்படும் என்பதால் அதிக மின்னாற்றலும் (மில்லியன் வோல்ட்களில்), உலையிலிருந்து கடும் வெப்பக்கதிர்வீச்சுகள் வெளிப்படுமென்பதால் உலையைக் குளிர்விக்க கனநீர் எனப்படும் டுயூட்டீரியம் ஆக்ஸைடு (D2O) அல்லது திண்மக் குளிர்விப்பான்கள் அல்லது வேதியெண்ணை (Mineral Oil) அல்லது சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த தண்ணீர் (H2O) தாராளமாகப் (30 ஆயிரம் டன்கள்) பயன்படுத்தப்படுகிறது. ஆகவேதான், ஜப்பான், அமெரிக்கா கொலராடோ உள்ளிட்ட இடங்களில் இருக்கும் நியூட்ரீனோ உலைகள் கடலுக்கு அடியில் செயல்படுகின்றன.

அப்படியானால் தேனீ மாவட்டத்தில் அதுவும் வறட்சியான பகுதியில் நியூட்ரீனோ உலையை நிறுவப்போகிறார்கள் என்றால் முல்லைப் பெரி(பேரி)யாறு அணைநீருக்கு அடிப்போடுகிறார்கள் என்றுதான் நினைக்கவேண்டி இருக்கிறது. கட்டாயம் அப்பகுதியிலிருக்கும் நம் மக்கள் தண்ணீருக்கு திண்டாடவேண்டி இருக்கலாம். அதோடு, எதிர்காலத்தில் இந்த உலகத்தைப் படைத்தது கடவுள் அல்ல, வெடித்துச் சிதறிய அண்டத்தின் மீச்சிறு பகுதியே இந்த பூமி என்று நியூட்ரீனோ ஆய்வுகள் கண்டுபிடித்து நிறுவினால் இன்று நியூட்ரீனோ உலை அமைத்தே தீருவேன் என்று இறங்கியிருக்கும் அரசு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை.

முனைவர் செ. அன்புச்செல்வன்
28/03/2018

தரவுகள்:
1. news.uchicago.edu/…/worlds-smallest-neutrino-detector-obser…

2. phys.org/news/2017-08-world-smallest-neutrino-detector

3. en.wikipedia.org/wiki/List_of_neutrino_experiments

ஒப்புதல் மற்றும் நன்றி!: இந்த எழுத்தாக்கம் (படைப்பு) முனைவர். செ. அன்புச்செல்வன் அவர்களுடையது என்பதை கொரிய தமிழ் தளம் வலைதளத்தின் ஆசிரியர் குழு ஒப்புமை செய்கிறது. அவ்வாறே! முனைவர் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கி கொரிய தமிழ் தளம் பாராட்டுகிறது.

ஆசிரியர் குறிப்பு: முனைவர். செ. அன்புச்செல்வன் சிறந்த இளம் வேதியியல் அறிவியலாளர். அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஆங்கில அறிவியற்பதங்களை தமிழில் எளிய முறையில் ஆக்கம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom)-யில் மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். முனைவர். செ. அன்புச்செல்வன் அவர்களின் மற்ற பதிவுகளை இங்கு காணலாம். http://vethiyanban.blogspot.kr/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *