இந்திய ஆராய்ச்சிகளும் நடுவணரசும் டார்வினும்!!

–  முனைவர். செ. அன்புச்செல்வன் (இலந்தைமரத்தான்), மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom)

நடுவணரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐஐடி களின் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கவேண்டிய தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டார்கள் என்று அறிகிறேன். தேசிய அளவில் நடத்தப்பெறும் CSIR-NET மற்றும் GATE தேர்வுகளில் தேர்வாகி அங்கு ஆராய்ச்சி செய்கின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட வேண்டிய உதவித்தொகைகளும் சரிவர தொடர்ந்து கிடைப்பதில்லை. இன்றைக்கோ நாளைக்கோ என்று மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில், பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) கீழியங்கும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி உதவித்தொகைக்காகக் காத்துக்கிடந்து, வயிற்றுப்பாட்டுக்கு இல்லாமல் , குடும்பத்திடமும் கேட்கமுடியாமல் அல்லலுறும் ஆராய்ச்சி மாணவர்களைப்போல, இன்று ஐஐடி மாணவர்களின் நிலையும் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை.

Image may contain: text

அறிவியல் ஆராய்ச்சிக்கான தொகைகளை அளித்துவந்த CSIR நிறுவனம் ஏற்கெனவே திவாலான நிலையில் நொண்டிக்குதிரை போல இன்றோ பிறகோ என்று ஓடிக்கொண்டிருக்கிறது இல்லை ஓடுவதைப்போல மக்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். UGC நல்ல நாளிலேயே மாணவர்களுக்கு ஊதியம் சரியான சமயத்தில் தராது. டெல்லி அலுவலகத்தில் மதிய உணவுக்குப்பின்னர் ஷிப்ட் முறையில் கதவை சாத்திக்கொண்டு தூங்குகின்ற அதிகாரிகள் வாழ் உலகல்லவா அது? இப்போதைய நிதிநிலையில் சொல்லவா வேண்டும்? குளிருக்கு இதமாகக் கம்பளி கொண்டுவந்திருப்பார்கள். பெரும்பான்மையான ஆராய்ச்சிகள் நிதியின்றிச் சுணக்கமடையத் தொடங்கியிருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல.

வெளிநாடுகளில் அறிவியல்-பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி அனுபவம் பெற்று தாய்நாடு திரும்பி ஆராய்ச்சிகளைத் தொடரவிரும்புபவர்களுக்குச் செய்யப்போகும் ஆராய்ச்சியைப் பொறுத்தும், பெற்ற அனுபவத்தைப் பொறுத்தும் தேர்வுசெய்து கொடுக்கப்படும் இராமானுஜன் (CERB) உதவித்தொகையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டதாகவும், அரசாங்கத்தின் நிதிநிலை மோசமாக இருப்பதால் இன்னும் ஓரிரண்டாண்டுகளுக்கு சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கைவிரிப்பதாக (நடுவணரசின் வாய்மொழி உத்தரவாம்) கேள்விப்படுகிறேன். அப்படியே எடுத்தாலும் ஆண்டுக்குப் பத்துப்பேருக்கு மட்டும் கொடுத்து சரிக்கட்ட முயலலாம்.

இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு
நாடெங்கும் ஆராய்ச்சிகளைத் தொடர்கின்ற மாணவர்கள் இருக்கும் திசை நோக்கித் தொழுதாலும் தகும். இந்தநிலையில் இந்திய ஆராய்ச்சி சென்றுகொண்டு இருக்கும்போது நடுவணரசு மனிதவளநலத்துறை அமைச்சர் சத்யபால் சிங் அவர்கள், டார்வின் கொள்கை ஆதாரமற்றது என்றும், ஆதியிலிருந்து மனிதன் மனிதனாகவே இருந்திருக்கிறான், குரங்கிலிருந்தெல்லாம் பிறக்கவில்லை என்றும் தன் ஆராய்ச்சியை வெளியிட்டிருப்பதோடு, பள்ளிகளில் மாணவர்களுக்கு டார்வின் கொள்கைகள் பற்றிய பாடங்கள் தேவையில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். இதை உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் காதில் கேட்டால் எதில் சிரிப்பார்கள் என்று நான் இங்கே சொல்ல வேண்டியதில்லை. குரங்கிலிருந்து மனிதன் பிறந்திருக்கக்கூடும் என்பது டார்வினின் கோட்பாடுகளில் ஒரு கூறு மட்டுமே.

கரும்பு ஆராய்ச்சியில் குறிப்பாக மரபணு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட கமலம் அம்மாள் (இந்தியாவின் முதல் பெண் முனைவர்) பல்லாண்டுகள் அரும்பாடுபட்டு உருவாக்கிய கரும்பு வகைகள் முதல், வெளிநாடுகளில் இருந்து எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள் கொணர்ந்த நெல்மணிகள் உட்பட யாவையும் டார்வினின் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே பல்கப் பெருக்கி கோடிக்கணக்கான மக்களின் பஞ்சமறுத்துப் பசிப்பிணி தீர்க்கப்பட்டது என்பது வரலாறு. இன்றைய உயிரி-தொழில்நுட்ப (பயோடெக்னாலஜி) ஆராய்ச்சி உலகமும் மரபணு ஆராய்ச்சிகளைத்தாம் செய்து பலப்பல சாதனைகளை எய்திக்கொண்டு இருக்கிறது. டார்வின் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் மனிதகுலத்துக்குப் புதுப்புது பயன்தரும் தாவரங்கள், விலங்கினங்கள் உருவாக்கப்படுகின்றன.

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. (குறள் 738)”

என்று குறள் சொல்வதைப்போல, மருத்துவம், செல்வம், உணவு, இன்பமான வாழ்வு, பாதுகாப்பு என்று ஒரு நாட்டின் ஐந்து வளர்ச்சிக்கூறுகளுக்கும் இன்றைய நாளில் மரபணு ஆராய்ச்சியே அடிப்படையாக விளங்குகிறது. மரபணு என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? அதன் பண்புநலன்கள் என்னவென்று கிஞ்சித்தும் தெரியாதவர்கள் கூட “மரபணு” என்றாலே “தீங்கு” என்ற எண்ணத்தை மக்களிடத்தில் உருவாக்கிவிட்டதன் எச்சமே இன்று நம் அமைச்சரும் சொல்வது என்று நினைக்கிறேன். இது நம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட சாபக்கேடு. தொடர்ந்து இரத்த சொந்தத்துக்குள் திருமணம் செய்கின்றவர்களின் குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கிறார்கள் என்று அறுதியிடப்படுவதும்கூட டார்வினின் கோட்பாடுகளின் அடிப்படையில்தான்.

பாசக அரசில் மட்டும் ஏன் இப்படியான அமைச்சுகள் இருக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளுக்கு உரிய நிதி ஒதுக்கி அவற்றை மேம்படுத்தி, அதோடு பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்திய அறிவியலாளர்களை மீண்டும் வரவழைத்து நாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து, புதுப்புது கட்டமைப்புகளை உருவாக்கினால் மட்டுமே வல்லரசுக் கனவு வசப்படும். அவற்றை விடுத்து, இதுபோல மடத்தனமான செயல்கள் தொடர்ந்து நடக்குமானால், நம் அடுத்த வளர்தலைமுறை அறியாமை இருளில் விழுந்து பொதுவெளியில் அறிவற்றப் பதர்களாகிப் போவார்கள் என்பது மட்டும் உறுதி. உலகமே முன்னேறும்போது நாமும் வாயைப் பிளந்தபடி வேதத்தில் விமானம் விட்டகதை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான். “செய்யறத விட்டுட்டு சினையாட்டுக்குத் தும்பு திரிக்கிறான்” என்றொரு கொங்குச் சொலவடை நினைவுக்கு வருகிறது.

முனைவர் செ. அன்புச்செல்வன்
22/01/2018

ஒப்புதல் மற்றும் நன்றி!: இந்த எழுத்தாக்கம் (படைப்பு) முனைவர். செ. அன்புச்செல்வன் அவர்களுடையது என்பதை கொரிய தமிழ் தளம் வலைதளத்தின் ஆசிரியர் குழு ஒப்புமை செய்கிறது. அவ்வாறே! முனைவர் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கி கொரிய தமிழ் தளம் பாராட்டுகிறது.

ஆசிரியர் குறிப்பு: முனைவர். செ. அன்புச்செல்வன் சிறந்த இளம் வேதியியல் அறிவியலாளர். அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஆங்கில அறிவியற்பதங்களை தமிழில் எளிய முறையில் ஆக்கம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom)-யில் மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். முனைவர். செ. அன்புச்செல்வன் அவர்களின் மற்ற பதிவுகளை இங்கு காணலாம். http://vethiyanban.blogspot.kr/