Lost your password?...

 மங்கம்மா

– பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி

 

திருச்செந்தூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அமைதியான, அழகிய சிற்றூர் அது.

கிழக்கு ரத வீதியில்தான் காவேரியின் வீடு.  ஊரின் அமைதிக்கு எதிர்மறையாக அந்த வீதியில் எப்போழுதும் மக்கள் கூட்டம் இருக்கும். அதற்குக், தேரடி வாசலில் கடை விரித்திருக்கும் காய்கறி வியாபாரிகளும், தெரு முனையில் அமைந்திருக்கும் இரண்டு பலசரக்குக் கடைகளும்தான் காரணம். கிராமத்து ‘ஜனங்கள்’ எல்லாம் ‘சமான் செட்டு’ வாங்க அங்கேதான் வருவார்கள். அது மட்டும் அல்லாமல், தேரடி மெயின் ரோட்டுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால், பக்கத்து ஊர்களுக்கும் அது ஒரு சந்தை இடமாக அமைந்துவிட்டது.

அன்று வெள்ளிக்கிழமை; காலை மணி பத்து இருக்கும். வாசலில் “அம்மா.. அம்மா” என்று ஒரு பெண்ணின் ஈன சுரத்தில் ஒரு குரல் ஒலித்தது அடுக்களையிலிருந்து எட்டிப்பார்த்தாள் காவேரி. ஒரு இருபத்தைந்து வயது மதிக்கலாம்; மானிறமாக, பறட்டைத் தலையுடன்,  இடுப்பில் ஒரு குழந்தை, கையில் இரண்டு குழந்தைகளுமாக  நின்றுகொண்டிருந்தாள் ஒரு கர்ப்பிணிப் பெண். பெரிய வயிறு. வழக்கமாக வரும் பிச்சைக்காரி இல்லை. புதிய முகம்; காவேரி விறகு அடுப்பை குறைத்து வைத்துவிட்டு கைகளை முந்தானையில் துடைத்துக்கொண்டு வாசலை நோக்கி வந்தாள்.  “யாரும்மா அது? என்ன வேணும்?”

“அம்மா, புள்ளங்க பட்டினியா கெடக்குது எதாவது சாப்பிட குடு தாயி” அவள் குரலில் இருந்த பரிதாபம், காவேரிக்கு இரக்கத்தை வரவழைத்தது.

“இரு வாரேன்” என்றபடி உள்ளே சென்று, காலையில் செய்து மிச்சமான  ஐந்தாறு  இட்டிலிகளையும் கொஞ்சம் சாம்பாரும் எடுத்துக்கொண்டு மீண்டும் வாசலுக்கு வந்தாள். அப்பொழுதுதான் கவனித்தாள், அந்தப்பெண்ணின் கையில் பிச்சைப்பாத்திரம் ஏதும் இல்லை.

“ஏம்மா, எதுல வாங்கிகுவ? பாத்திரம் இல்ல?” என்று கேட்டாள் காவேரி.  முந்தானையை விரித்து “இதுல போடு தாயி “ என்றாள் அந்தப் பெண். அதற்குள் அந்த குழந்தைகள் கண்களில் பசியுடன் கைகளை நீட்டின.

“அடிப்பாவி. இப்படி வெறும் கையோடவா வருவே” என்றபடி உள்ளே சென்று ஒரு வாழை இலையை கொண்டு வந்து கொடுத்தாள். “இதுல வச்சி எடுத்துகிட்டுப் போ..” என்றபடி இட்டிலியை இலையில் வைத்து, சாம்பாரை அதன் மேல் ஊற்றி கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

சற்று நேரம் கழித்து மீண்டும் ஏதோ வேலையாக வாசலுக்கு வந்தவள் அங்கே திண்ணையில் அந்தப் பெண்ணும் இரண்டு குழந்தைகளும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, “அடிப் பாவி மக்கா. இங்கேயே உக்காந்து சாப்பிறியளா. உனக்குப் பாவம் பாத்ததுக்கு எனக்கு வேலை வச்சுட்டியா?. இப்பதான் வீடெல்லாம் கழுவி விட்டேன்; இப்ப மறுபடியும் யாரு கழவுறது?. எல்லாம் எனக்கு வேலவக்கத்தான் வருதுவ. கிளம்பு, கிளம்பு” என்று வெடித்தாள்.

“மன்னிச்சுக்கோ தாயி. புள்ளங்க பசி தாங்காம அளுதுங்க.. அதான். நா சுத்தம் பண்ணி குடுத்துடுரேன். ஒரு தொடப்பம் இருந்தா குடு தாயி..” என்று கெஞ்சினாள் அந்தப் பெண்.

துடைப்பத்தை எடுத்துக் கொடுக்கப் போன காவேரிக்கு, ‘அட, பிள்ளைதாச்சியைப் போய் வேலை வாங்குவதா’ என்ற எண்ணம் எழவே, “சரி சரி; ஒண்ணும் வேண்டாம். நீ போ நான் பாத்துக்கிறேன்” என்றபடி உள்ளே சென்றுவிட்டாள்.

இது நடந்து ஒரு நான்கு ஐந்து நாட்கள் கழித்து, மீண்டும் காலை, பத்து மணி. அதே குரல்; அதே அவலக்குரல் காவேரியை அழைத்தது. வெளியே எட்டிப்பார்த்த காவேரி, “மறுபடியும் நீயா” என்பது போல அலுப்புடன் பார்த்தாள். “ஒண்ணுமில்ல போ” என்று சொல்ல வாயெடுத்தவள், உணவை எதிர்பார்த்து ஆவலுடன் அவள் முகத்தையே  நோக்கும் அந்தக் குழந்தைகளைப் பார்த்ததும் மனதை மாற்றிக்கொண்டாள்.  உள்ளே சென்று கொஞ்சம் சோறும் குழம்பும் எடுத்து வந்தாள்.

வழக்கம் போல அந்தப் பெண் வெறும் கையோடுதான் வந்திருந்தாள்; அன்று போலவே, இடுப்புக் குழந்தையுடன் இரண்டு கைக்குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தாள். சாப்பாட்டை வாங்கியதும், “அம்மா, இங்கியே சாப்புட்டுட்டு பொயிடுரேன் தாயி” என்று கெஞ்சலுடன் கேட்டாள் அவள். “சரி..சரி. சாப்பிடு ” என்று அனுமதி கொடுத்த காவேரி, “ஆமா நீ யாரு? எங்கெ இருந்து வாரே? உன் பேரு என்ன? ” என்று குசலம் விசாரிக்க ஆரம்பித்தாள்.

“ஏம் பேரு மங்கம்மா தாயி. நாங்க வடக்கேயிருந்து வர்ரோம். களக் கூத்தாடிங்க. ஊருக்கு வெளிய கொட்டா போட்டு இருக்குறோமுங்க.” என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.

“கழக்கூத்தாடிங்குற, அப்புறம் ஏன்.. “ என்றவள்  “பிச்சை எடுக்கிறாய் “ என்ற வார்த்தையை சொல்லாமல் விழுங்கினாள்.

அந்த நாட்களில், கிராமங்களுக்கு வரும் கூத்துக் கலைஞர்கள், கழைக் கூத்தர்கள், நாடோடிப் பாடகர்கள், குரங்கு வித்தை காட்டுபவர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களை அந்த ஊரே தத்து எடுத்துக் கொள்ளும். அந்த ஊரில் தங்கி இருக்கும் நாட்களில் எல்லாம் சாப்பாடு, துணிமணி போன்ற பொருட்களை, ஊர் மக்கள் மனமுவந்து கொடுத்து உதவுவார்கள். அதைப் பிச்சை என்று யாரும் சொல்வதில்லை, நினைப்பதில்லை. இப்போதான் காலம் மாறிப் போச்சு. அப்படி யாரும் வருவதும் இல்லை; வந்தாலும் ஆதரிப்பார் இல்லை.

“அத ஏன் கேக்குற தாயி. எம் புருசன் வெசக்காச்சல் வந்து ஒடம்பு முடியாம கெடக்காரு. கூத்து நடந்து பத்து பதினஞ்சி நாளக்கி மேல ஆயிடுச்சி; பொளப்புக்கு வளி இல்ல தாயி. நா நல்லா இருந்தா ஏதாவது கூலி வேலக்கி போவேன். இந்த வயித்த தள்ளிக்கிட்டு ஒண்ணும் முடியில. இந்தப் புள்ளங்களப்பாத்தா தான் பாவமா இருக்கு. அதான், நாலு வீட்டுல கேட்டு வாங்கி தின்னுகிட்டு இருக்கேன்..” இதைச் சொல்லி முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது மங்கம்மாவுக்கு.  காவேரிக்கு மங்கம்மாவைப் பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது.

“இனிமேல நீ எங்கயும் போக வேண்டாம் மங்கம்மா. காலையில காலையில நேரா இங்க வந்துடு. என்னால முடிஞ்ச கஞ்சியோ கூழோ ஊத்துறேன்…” என்று வாஞ்சயுடன் சொன்னாள் காவேரி. “புண்ணியமா போவும் தாயி” என்று வாழ்த்தினாள் மங்கம்மா.

அதற்கு அப்புறம் மங்கம்மா தினமும் டாண்ணென்று பத்து மணிக்கு ஆஜர் ஆவதும், காவேரி சாப்பாடு கொடுப்பதும், அதை அவர்கள் அந்தத் திண்ணையிலேயே வைத்து தின்னுவதும் அந்த தெரு பெண்மணிகளுக்கு குழாயடிப் பேச்சாக மாறிவிட்டது.

“ஏன் காவேரி.. இன்னிக்கி உன் ஆளுக்கு என்ன பெசல்?… எங்களுக்குதான் ஒண்ணும் குடுக்க மாட்ட…” என்று கிண்டல் பேச்சு பேசினாலும், காவேரியின் நல்ல மனது பற்றி பெண்கள் தங்களுக்குள் சிலாகித்துக் கொள்வதிலும் தவறுவதில்லை

என்ன நல்ல மனது இருந்து என்ன பிரயோஜனம். காவேரிக்கு இருபது வயதில் கல்யாணம்; இப்போ வயது முப்பத்தி இரண்டு ஆகிவிட்டது. வயிற்றில் ஒரு புழு-பூச்சி இல்லை. போகாத கோயில் இல்லை. கும்பிடாத தெய்வம் இல்லை.

காவேரியின் கணவன் கிருஷ்ணசாமி ஒரு சிறு ஜவுளி வியாபாரி. ஆறுமுகனேரியில் கடை வைத்திருக்கிறார். அவரது கைகளிலும் கழுத்திலும் சுமார் ஐம்பது கயிறுகள், தாயத்துகள் தொங்கிக்கொண்டிருந்தன. “தாயத்து யாவாரி வாராருப்பா” என்று வியாபாரிகள் வட்டத்தில் புனைப் பெயரில் கிண்டலடிக்கும் அளவுக்கு, அவர் ஒரு சாமியார் லெவலுக்குப் போய் விட்டார்.

மங்கம்மாவுக்கு வயது இருபதி ஏழாம். ‘சேறு-தண்ணி வசதி இல்லாட்டியும் நல்லா மூக்கும் முழியுமா அழகாத்தான் இருக்கா’. பதினெட்டு வயதில் திருமணம். கையில் மூன்று பெண் குழந்தைகள். இப்பொழுது, வயிற்றில் எட்டு மாதமோ ஒன்பது மாதமோ….

‘தின்ன சோறு இல்லாட்டியும்’ புத்திர பாக்கியத்துக்கு குறைசல் இல்லை’

மங்கம்மாவின் பெரிய பெண்ணுக்கு ஆறு வயது. கருப்பாக ஒல்லியாக இருந்தது. இரண்டாவது பெண்ணுக்கு நாலு வயது இருக்கும். கொஞ்சம் பூசினாப் போல ‘கலரா’ இருந்தது. இந்த இரண்டு பெண்களும் தான் இவர்களின் கழைக்கூத்தின் முக்கிய ஆட்டக்காரர்களாம். அந்த கைக்குழந்தைக்கு வயது இரண்டு இருக்கலாம், காவேரியைப் பார்த்தும் நீண்ட நாள் சினேகிதம் போல, கையை ஆட்டிக்கொண்டு சிரிப்பதும், அவளைப்பார்த்து தாவுவதுமாக; கருப்பா இருந்தாலும் ரொம்ப அழகு அந்தக் குட்டி.

காவேரிக்கு சொந்த வீடு, நிலம் நீச்சு என்று என்ன இருந்து என்ன? பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்றால் வாழ்க்கையே வெறுமை தானே. ஆனால் காவேரி இப்போதெல்லாம் பிள்ளையில்லாக் குறையைப் பற்றி நினைப்பதே இல்லை. ஆண்டவன் விட்ட வழி என்று அமைதி அடைந்துவிட்டாள்.

“கவலப்படாத தாயி. ஆண்டவன் யாருக்கு எத குடுக்கணும்; எப்ப குடுக்கணுமுண்ணு எளுதி வச்சிருப்பாரு. நா சொல்றேன். ஒனக்கு, தங்கக்கட்டி மாதிரி ஆம்பளப் புள்ள இன்னும் ஒரு வருசத்துல பொறக்கலன்னா எம் பேரு மங்கம்மா இல்ல. ஆமா” காவேரியின் கதையைக் கேட்டபின் மங்கம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தை இது.

காவேரிக்கு இந்த பேச்சு ஆறுதலாக இருந்தது என்னவோ உண்மைதான். “மூணு புள்ள பெத்தவ. அவ வாய் முகூர்த்தம். நடக்கட்டுமே.” என்று மனதுக்குள் மகிழ்ந்து போவாள்.

கிட்டத்தட்ட  பதினைந்து நாட்கள் இப்படி கழிந்தன. திடீரென ஒரு நாள் மங்கம்மா வரவில்லை. ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாட்கள் ஓடிவிட்டன. அவள் வரும் அறிகுறி தெரியவில்லை. காவேரிக்கு இருப்பு கொள்ளவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை. கிருஷ்ணசாமிக்கு கடை லீவு. வீட்டில் ஓய்வாக படுத்திருந்தவரை எழுப்பி, “ஒரு எட்டு போய்” பார்த்துவிட்டு வரச் சொன்னாள்.

அவரும் அலுத்துக்கொண்டே எழுந்து தன் பைக்கை எடுத்துக் கொண்டு  தேடிப் போனார். போனவர் போனவர் தான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துதான் வந்தார். “என்னங்க ஆச்சு; என்னங்க ஆச்சு” என்று பதறியவளிடம். “அந்த ஆளுவ எடத்தை காலி பண்ணிட்டு போயிடாவளாண்டி. வேற வேல இருந்தா போய்ப் பாரு. போ… ” என்று கடுப்படித்தார் கிருஷ்ணசாமி. அவர் பிரச்சினைகள் அவருக்கு.

ஆனால் காவேரிக்கு மனம் சமாதானப் படவில்லை. ‘மங்கம்மா சொல்லாமல் கொள்ளாமல் போயிருக்கமாட்டாள். அவர்கள் நட்பு அத்தகையது ஆயிற்றே.  கற்பிணிப் பெண். ஆனால் பிரசவ தேதி வந்திருக்காதே..  அவளுக்கு வேறு என்னவோ பிரச்சனை’  என்று மனசுக்குள் வருந்திக்கொண்டாள். ஆனாலும் அவளால் செய்ய முடிந்தது ஏதும் இல்லையே.

மறு நாள் காலை ஏழு மணி இருக்கும், கருகருவென்று உயரமாக ஒரு ஆள், வாசலில் வந்து “ அம்மா; அம்மா” என்று கூப்பிட்டான். காவேரி பின் கட்டில் மாட்டுக்கு தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தாள். கடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி எட்டிப் பார்த்து, “யாருப்பா நீ. என்ன விஷயம்?” என்று கேட்டார்.

அவன், “அம்மா இல்லங்களா ஐயா” என்று எதிர் கேள்வி கேட்டான். “நீ யாருப்பா?” என்று சற்று அதட்டலாக இவர் கேட்டதும்,

“நா, மங்கம்மா புருஷனுங்க ஐயா” என்று அவன் சொல்லவும், காவேரி கூடத்துக்கு வரவும் சரியாக இருந்த்து. மங்கம்மா பெயரைக் கேட்ட்தும் காவேரி உடனே வெளியே வந்தாள். “என்ன ஆச்சு மங்கம்மாவுக்கு” என்று பதற்றத்துடன் கேட்டாள். “மங்கம்மாவுக்கு புள்ள பொறந்துருக்கு தாயி. ரெட்டப் புள்ளங்க. நேத்து சாயங்காலம் பொறந்துச்சிங்க. ஆப்புரசன் பண்ணிதான் எடுத்தாங்கம்மா. ரெண்டும் ஆம்பளப் புள்ளைங்க. மொதல்ல உங்ககிட்ட தான் சொல்லணுமுன்னு என்ன அனுப்பி விட்டா தாயி. திருச்செந்தூர் பெரியாஸ்பத்திரியில இருக்குங்க ஐயா” என்று வாயெல்லாம் பல்லாக  இருவருக்கும் செய்தி சொல்லிவிட்டு, “நா வரேன் தாயி.. வரேனுங்க ஐயா..” என்று கிளம்பினான் அவன்.

“இந்தாப்பா, செலவுக்கு வச்சிக்க” என்று சொல்லி கிருஷ்ணசாமி கொடுத்த நூறு ரூபாயை, உடல் வளைந்து பெற்றுக்கொண்டு கிளம்பினான்.

“புள்ளங்கள தனியாவா உட்டுட்டு வந்தே” என்று காவேரி கேட்டதற்கு. “எங்க அக்கா வந்துருக்குது தாயி” என்று போகிற போக்கில் பதிலளித்துவிட்டு சென்றுவிட்டான் அவன்.

அன்று இரவு சாப்பாடு போடும் பொழுது காவேரி தன் கணவனிடம் மெதுவாக தன் கோரிக்கையை முன் வைத்தாள். “என்னங்க, நாளைக்கு திருச்செந்தூர் பொயிட்டு வரலாமா?”

“ஏன் என்ன விஷயம் காவேரி…“ என்று அலுப்பாக கூறினார் கிருஷ்ணசாமி.

“ஒண்ணுமில்லை, அந்த மங்கம்மா என் கண்ணுலயே நிக்கிறா. ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திடலாமுண்ணு… “ என்று இழுத்தாள் காவேரி.

கிருஷ்ணசாமிக்கு நாளைக்கு திருநெல்வேலியில் ஒரு அவசர வேலை இருக்கிறது. மதுரையிலிருந்து ஒரு முக்கியமான புள்ளி வருகிறார். அவசியம் பாக்கணும். ஆனால்  காவேரியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ‘அவளது ஆசை, அந்தக் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்பதுதான். மங்கம்மாவைப் பார்ப்பது எல்லாம் அப்புறம்தான். தட்டிக் கழித்தால் ஏங்கிப்போவாள். பாவம், பிள்ளை இல்லை என்ற கவலையை மனதிற்குள் போட்டு பூட்டி வைத்துக்கொண்டு தன்னைத் தானே வருத்திக் கொண்டிருக்கிறாள். வாய் திறந்து ‘அது வேணும் இது வேணும்’ என்று கேட்கக்கூடத் தெரியாது காவேரிக்கு. காலாகாலத்தில் இவளுக்கு பிள்ளை பொறந்திருந்தா இப்ப அது நாலாவது அஞ்சாவது படித்துக் கொண்டிருக்கும். முதல் முதலாகத் தன் வாய்விட்டு ஒரு ஆசையை வெளியிட்டிருக்கிறாள்’ என்று எண்ணமிட்டபடி, “சரி அதுக்கென்ன. போனா போவுது” என்று தட்டைப் பார்த்துக் கொண்டே பதிலளித்தார்.

காவேரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இரவெல்லாம் சரியாகத் தூங்கக்கூட இல்லை அவள்.. ‘ரெட்டப் புள்ளங்களா? மங்கம்மா மாதிரி அழகா இருக்குங்களா இல்ல அவ புருஷன் மாதிரி ஒட்டடக் குச்சியா இருக்குங்களா?’… கண்ணை மூடினாலே ஒரே கனவுதான். ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து ஏழு மணிக்கெல்லாம் சமையலையும் முடித்து ரெடியாகி விட்டாள். மங்கம்மாவுக்கும் அவள் குழந்தைகளுக்கும் இட்டிலி சுட்டு அதை ஒரு பெரிய கேரியரில் அடைத்து, எல்லாம் ரெடி.  கிருஷ்ணசாமிதான் இன்னும் ரெடியாகவில்லை. ஒருவழியாக ஒன்பது மணிக்குமேல் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூருக்குப் புறப்பட்டனர்.

ஒரு பத்து மணி அளவில் திருச்செந்தூர் பொது மருத்துவ மனைக்கு வந்து மங்கம்மாவைத்  தேடினர் இருவரும். எங்கு தேடியும் காணவில்லை. பொறுப்பாக பதில் சொல்ல யாரும்  இல்லை.

கிருஷ்ணசாமிக்குத் தெரிந்த ஆள் ஒருவர் இந்த மருத்துவ மனையில்தான் ஏதோ ஒரு வேலையில் இருக்கிறார் என்பது காவேரிக்கு நினைவுக்கு வந்ததும், “என்னங்க, உங்க நண்பர் ஒருத்தர் பாண்டியன்னு… இங்க வேல செய்யிறாருல்ல. அவரப் போயி பாக்கலாமா?“  என்று  சொன்னபின் கிருஷ்ணசாமி “அட ஆமா” என்று அந்த ஆளைத் தேட ஆரம்பித்தார். ஒரு அரை மணி நேர தேடலுக்குப் பின்னர் அவர் அகப்பட்டார். கிருஷ்ணசாமியைப் பார்த்ததும்  “வாங்க அண்ணாச்சி; வாங்க மைனி; நல்லாருக்கியளா? என்ன இந்தப் பக்கம்? யாருக்காவது மேலுக்கு சொகமில்லையா ? ” என்று விசாரித்தார் பாண்டியன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாண்டியன். இங்க மங்கம்மான்னு ஒரு களக்கூத்தாடி பொண்ணு; ரெட்டப்புள்ளங்க பொறந்துச்சாமே… அதப்பாக்கத்தான் வந்தோம். ஆனா எங்கே இருக்காகன்னு கண்டுபிடிக்க முடியல. அதான் உம்மக் கேட்டாத் தெரியுமுண்ணு வந்தோம்..” என்றார். “அப்படியா அண்ணாச்சி. வாங்க விசாரிப்போம்; உள்ள இருக்குறதெல்லாம் நம்ம கூட்டாளிகதான்” என்றபடி, இவர்களை ஆஸ்பத்திரிக்கு உள்ளே கூட்டிச்சென்றார்.

ஜெனரல் வார்டுகளின் நெறிசலுக்கு ஊடே நடந்து கடைசியாக செவிலியர் இருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தனர். பாண்டியன் மட்டும் உள்ளே சென்று விசாரித்தார். சிறிது நேர தாமதத்துக்குப் பின்னர் வெளியே வந்தார் பாண்டியன். அவருடன் ஒரு நர்ஸும் வந்தார்.

அந்த நர்ஸ் கிருஷ்ணசாமியைப் பார்த்து, “அந்த புள்ள உங்களுக்கு தெரிஞ்ச புள்ளையா சார்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணசாமி “அப்படி ஒண்ணும் இல்லங்க சிஸ்ட்டர், களக்கூத்தாடி பொண்ணு. எங்க வீட்டுல வந்து ஏதாவது வாங்கித்தின்னுட்டுப் போவும். அதோட புருசன் நேத்து வந்து புள்ளங்க பொறந்திருக்குன்னு சொல்லிட்டு போனான். அதான் பாத்திட்டு போவலாமுண்ணு வந்தோம். எங்க இருக்காங்க அவங்க? “

“சாரிங்க சார். அந்த பொண்ணு ஜன்னி வந்து இன்னிக்கி காலைலதான் செத்துப்போச்சி. ரெண்டு புள்ளயிலயும் ஒண்ணு தான் உயிரோட இருக்குது இப்ப. வெயிட்டு ரொம்ப கம்மியா இருந்துங்க. புள்ளைய இங்குபேட்டர்ல வச்சிருக்கோம்.  அவ பாடி மார்ச்சுவரியில இருக்கு.  புள்ளய பாக்கணுமுன்னா  ‘சீ’ வார்டுல இருக்குது. இப்படியே போயி லெப்ட்ல….” நர்ஸம்மா சொல்லிக்கோண்டே போனார். காவேரிக்கு எதுவும் காதில் ஏறவில்லை… தலை சுற்றியது. அப்படியே கீழே சரிந்தாள்.

சடாரென்று கிருஷ்ணசாமி தாங்கிப் பிடித்துக் கொண்டதால் சரியாய் போயிற்று. இல்லை என்றால், கீழே விழுந்து தலையில் அடிபட்டிருக்கும். நர்ஸம்மா “ஏய் இங்கே வாங்கடி சீக்கிரம்” என்று கத்தவும், ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் ஓடிவந்தனர். காவேரியை தூக்கிக்கொண்டு போய் காலியாய் இருந்த ஒரு படுக்கையில் படுக்க வைத்தனர். முகத்தை ஒரு ஈரப் பஞ்சினால் துடைத்தனர். கொஞ்ச நேரத்தில் ஒரு சின்ன வயசு டூட்டி டாக்டர் ஒருவர் வந்து பரிசோதித்தார். நர்ஸிடம் ஏதோ சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

கிருஷ்ணசாமி “சார், எப்பிடி இருக்கு சார்? என்ன பிரச்சின? ” என்று நாத்தழுதழுக்க கேட்ட கேள்விகளைக் காதில்கூட வாங்கிக் கொள்ளவில்லை அந்த டாக்டர். கிருஷ்ணசாமிக்கு, கண்களில் கண்ணீர் முட்டியது. நிற்க முடியாமல் தரையில் உட்கார்ந்துவிட்டார்.. இன்னொரு நர்ஸ் வந்து, “சார். இங்கெல்லாம் உக்காரக் கூடாது. அப்பிடி வெளியில போயி நில்லுங்க. போங்க போங்க…” என்று விரட்ட ஆரம்பித்தாள்.

கிருஷ்ணசாமி வார்டை விட்டு வெளியில் வந்து அங்கிருந்த ஒரு பெஞ்சில் ஓரமாக உட்க்கார்ந்தார் காவேரிக்கு ஏதாவது என்றால் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. எப்படிப்பட்ட பெண் அவள். அவளை மாதிரி பொண்டாட்டி கிடைக்க அவர் கொடுத்து வைத்திருக்க அல்லவா வேண்டும்.

நர்ஸுடன் பேசிவிட்டு வந்த பாண்டியன் ஆறுதல் சொன்னார். “பயப்படாதீங்க அண்ணாச்சி, லேடி டாக்டர் வர்ராங்களாம். மைனிக்கு ஒண்ணும் இருக்காது. காலையிலேருந்து ஏதும் சாப்புடாம வந்திருப்பா போல. ட்ரிப்ஸ் போட்டுருக்காவ. நீங்க தைரியமா இருங்க. இதொ ஒரு பத்து நிமிசத்துல நா வந்துடுரேன்”  என்றபடி இறங்கிச்சென்று விட்டார்.

“சே.. சனியன்புடிச்ச கூத்தாடிச் சிறுக்கி. எங்கயாவது போயி செத்துத் தொலைக்க வேண்டியதுதானே. ஏன் எங்க உசிர வாங்கரா..” என்று மனதுக்குள் பொறுமிக்கொண்டே இருந்தார் கிருஷ்ணசாமி.

சுமார் ஒரு மணி நேரம் சென்றிருக்கும், லேடி டாக்டர் ஒருவர் தன் கனமான உடலைத்தூக்கிக் கொண்டு மாடிப்படியில் ஏறி வந்தார். அவர் தலையைப் பார்த்ததும், “ஆம்பிளங்கள்ளாம் வெளிய இருங்க” என்று வார்டு ஊழியர்கள் கத்தியவாறு, எல்லாரையும் வாசலுக்கு அனுப்பினர். டாக்டர் வார்டில் கடைசி மூலையிலிருந்து ஒவ்வொருவராக போய்ப் பார்த்துக் கொண்டே வந்தார்.

கடைசியாக காவேரி இருக்கும் பெட்டிற்கு வந்தார். நாடி பிடித்துப் பார்த்தார். ஸ்டெத் வைத்துப் பார்த்தார். அதற்குள் காவேரி கண்விழித்திருந்தாள். காவேரியிடம் ஏதோ விசாரித்தார். அப்புறம்… “யாருப்பா இவங்க கூட” என்று சத்தமாகக் கேட்டதும், கிருஷ்ணசாமி ஓடி வந்து “நான்தாங்க” என்றார். “ஏய்யா. வாயும் வயிருமா இருக்கிர பொம்பளய பட்டினி போட்டு வச்சிருக்கியே. அறிவில்ல?. மொதல்ல சாப்பிட எதாவது வாங்கிக் கொடு..” என்றபடி தன் பவனியைத் தொடர்ந்தார்.

கிருஷ்ணசாமி செய்வதறியாமல் திகைத்து நின்றார். நர்ஸ்சம்மா வந்து, “என்னா சார்! டாக்டர் சொன்னது புரியலயா!! உங்க சம்சாரம் உண்டாயிருக்காங்க சார். ஒடம்பு வீக்கா இருக்கு. வீட்டுல வச்சி நல்லா பாத்துக்குங்க. இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சி நீங்க கூட்டிட்டு போகலாம். ஆல் த பெஸ்ட் சார்…” என்று சிரித்தபடி நகர்ந்தார்.

கிருஷ்ணசாமிக்கு கண்களில் நீர் வழிந்தது. ஆனந்தக் கண்ணீர். காவேரியின் படுக்கை அருகில் வந்து நின்று அவள் கையைப் பிடித்துக் கொண்டார். இருவருக்கும் பேச்சு வரவில்லை. இதற்குள் அங்கு வந்த பாண்டியன் நர்ஸ்சம்மாவிடம் தகவல் சேகரித்திருப்பார் போல. “எல்லாம் செந்தூர் முருகன் அருளுதான் அண்ணாச்சி. ரொம்ப சந்தோஷம். பிள்ளைக்கு முருகன் பேர வையுங்க. பொண்ணா இருந்தா வள்ளின்னு வையுங்க” என்று சொல்லி கடகட வென சிரித்தார்.  கிருஷ்ணசாமிக்கு வெட்கம் வந்துவிட்டது. காவேரியின் கையை மெதுவாக விடுவித்தார்.

பெண்ணாகப் பிறந்தால் அதற்கு மங்கம்மா என்று தான் பெயர் வைக்கவேண்டும் என்று காவேரி தனக்குள் சொல்லிக் கொண்டாள். சில மணித்துளிகள்தான் அந்த சந்தோஷம்  நீடித்தது காவேரிக்கு. மங்கம்மாவின் நினைப்பு வந்ததும் துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது.  அழ ஆரம்பித்தாள்.  கிருஷ்ணசாமிக்கு என்ன ஏதென்று புறியவில்லை. “என்ன ஆச்சு? ஏண்டி இப்ப அழுவுற? வயித்த ஏதாவது வலிக்குதா?” என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தார். ஆனால் காவேரி தன் அழுகையை நிறுத்தவில்லை. தேம்பித் தெம்பி அழுதுகொண்டிருந்தாள். ஒருவாராக அழுகை நின்றதும், “எனக்கு அந்த புள்ளயப் பாக்கணுங்க” என்றாள் அவள்.

“இவ்வளவுதானா? நான் என்னவோ ஏதோன்னு பாத்தேன். அதுக்கு இன்னும் ஒடம்பு சரியாகலே. ட்ரீட்மென்டுல இருக்குதுடி. இப்ப பாக்க முடியாதாம். நாம ஊட்டுக்கு போவலாம். பொறவு நாளைக்கு வந்து பாத்துக்குறலாம் காவேரி. வீணா அழுது ஒடம்பக் கெடுத்துக்காத. சாமியே பாத்து நமக்கு ஒரு வரம் குடுத்துருக்காரு. தைரியமா, சந்தோசமா இருக்கணும். புரியுதா.” என்று சிறு குழந்தைக்குச் சொல்லுவதுபோல ஆறுதல் சொல்லிவிட்டு, “நீ இருக்குற நெலமயில பைக்குலல்லாம் போவக்கூடாது  அதனால நான் போயி ஒரு டாக்ஸி ஏற்பாடு பண்ணிட்டு வாரேன்.. நீ நிம்மதியா ரெஸ்ட் எடு. அழுவாத காவேரி..” என்றபடி நகர்ந்தார் கிருஷ்ணசாமி.

கணவன் பேசியதில் ஓரளவுக்கு நிம்மதி அடைந்த காவேரி, சற்று கண் அயர்ந்தாள். எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. கிருஷ்ணசாமி வந்து எழுப்பி டாக்ஸியில் இருவரும் வீடு போய் சேர்ந்தபொழுது மணி மதியம் இரண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

மறுநாள் காவேரியின் தாயாரும் மற்ற உறவினரும் வந்துவிட்டனர். எங்கும் ஒரே சந்தோஷம் தான். கிருஷ்ணசாமி கடைக்கு லீவு விட்டுவிட்டார். கடை பையன்களும் வீட்டுக்கு வந்துவிட்டனர். அன்று மதியம் பெரிய விருந்து வீட்டில்.

அடுத்த நாள், மாலை மணி ஐந்து அல்லது ஆறு இருக்கும். யாரோ, “அம்மா, அம்மா” என்று வாசலில் அழைப்பது கேட்டது காவேரிக்கு. வெளியில் வந்து பார்த்தாள் காவேரி. மங்கம்மாவின் கணவன் அங்கே நின்றிருந்தான். அவனது கைகளில் அந்த பிஞ்சு குழந்தை. அவன் பின்னால் ஒரு வயதான பெண், அது மங்கம்மாவின் தாயாராக இருக்க வேண்டும், ஒரு பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருத்தி, அவள் மங்கம்மாவின் தங்கையாக இருக்க வேண்டும்; கூடவே அந்த மூன்று குழந்தைகளும் என்று மொத்த குடும்பமும் அங்கே ஆஜராகி இருந்தது.

அவர்களைப்பார்த்ததும் காவேரிக்கு அழுகை வந்தது.

“அழுவாதிங்க தாயி. அவ விதி முடிஞ்சிடுச்சி. எங்கள அனாதயா உட்டுட்டு போயிட்டா. சாவரதுக்கு கொஞ்சமுன்னாடிகூட ‘அம்மா வந்துறுவாங்களா? நீ நெசமா போயி சொன்னியா?’ என்று கேட்டுக்கிட்டேதான் இருந்தா தாயி.” என்று தேம்பினான் அவன். அப்புறம் கொஞ்சம் தெளிந்து, “ஊர்லயிருந்து மங்கம்மா தங்கச்சி செல்லமும் என் மாமியாரும் வந்திருகாங்க” என்று அவர்களை அறிமுகப்பருத்தினான். செல்லம் வெட்கத்துடன் சிரித்தாள். மங்கம்மா சாயலில் இருந்தாள் அவள். ஆனால் இவள் நல்ல சிவப்பு.

மங்கம்மாவின் தாய் சொன்னாள், “உங்கள மாதிரி நல்லவங்க இருக்கறதாலதான் மழ பேயுது தாயி. மங்கம்மா வார்த்தைக்கு வார்த்தை ஒங்களப்பத்திதான் பேசுவா. நீங்க நல்லா இருக்கணும். இந்த பிஞ்சு கொளந்தய ஆசீர்வாதம் பண்ணுங்க தாயி என்று அவன் கைகளில் இருந்த குழந்தையை வாங்கி காவேரியிடம் கொடுத்தாள் அந்தப் பெண்.

அந்தப் பிஞ்சுக் குழந்தை தன் கணளை இன்னும் மூடியபடிதான் இருந்தது, காவேரியின் கைக்கு வந்ததும் தன் பொக்கை வாயை மட்டும் திறந்து சிரித்தது. காவேரியின் கண்ணுக்கு மங்கம்மாவே சிரிப்பது போலத் தோன்றியது. உணர்சிப் பெருக்குடன் அந்தக் குழந்தையை முத்தமிட்டாள் அவள்.

ஆசிரியர் குறிப்பு: பொறியாளர். சுந்தரம் பரந்தாமன் அவர்கள் ஆய்வு  சார்ந்த தமிழ் மொழியியல் எழுத்தாளர். தற்பொழுது பாண்டிச்சேரியில் வசிக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *