Lost your password?...

கொங்கு நாட்டு எஃகு

பவள சங்கரி

 

 


எகிப்து நாட்டுப் பிரமிடுகளில் கொங்கு நாட்டு எஃகினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் இரும்பை எஃகாக மாற்றும் கலை கொங்கு நாட்டவரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதனை உலக இரும்பியல் நிபுணர்களான ஜே.ஜி. வில்கின்சன் மற்றும் ஜே.எம். ஹீத் ஆகியோர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சேலம் எஃகு கிரேக்கம், உரோம், எகிப்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அலெக்சாண்டருக்கு இந்திய மன்னன் போரசு (புருசோத்தமன்) அன்பளிப்பாகக் கொடுத்த 38 மணங்கு இரும்பு சேலத்து எஃகு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரும்பு உருக்காலை

“பவானியின் ஆற்றங்கரைகளில் 1847 முதல் 1914 வரை கான்கிரேவ், வில்லியம் ஃப்ரேஸர், சாண்ட்ஃபோர்டு, லாங்ஹர்ஸ்ட் ஆகியோர் ஆய்வுகளை மேற் கொண்டனர். 1960, 1961-களில் ஸ்ரீனிவாச தேசிகன் ஆய்வு மேற் கொண்டார். 2004- 2006 ஆண்டுகளில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.இராசன் வழிகாட்டுதலில் நான் ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வுகளில் இரும்புக் காலம் எனப்படும் கி.மு. 15 முதல் கி.மு. 5-ம் நூற்றாண்டு வரை, பவானி நதிக்கரையில் வாழ்ந்த மக்களின் சமூக, கலாச்சார, பொருளாதார தகவல்களை அறிய முடிந்தது. சிறுமுகை, அன்னதாசம்பாளையம், எலவமலை, சுண்டப்பட்டி, கோட்டத்துறை உள்ளிட்ட இடங்களில் கற்பதுக்கை, கற்குவை, கல்வட்டம், கல்திட்டை, குத்துக்கல், முதுமக்கள் தாழி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. அவை, அந்தச் சமூகத்தினரின் கல்லறைகள். அவர்கள், இறந்தவர்களின் உடலுடன் ஆபரணங்கள், மண்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகியவற்றையும் வைத்து அடக்கம் செய்திருக்கிறார்கள். விருமாண்டம்பாளையம், கொடிவேரி, சிறுமுகை ஆகிய இடங்களில் குறுவாள், அம்புகள், கத்திகள் கிடைத்தன. ரத்தினக் கல் மணிகள், சூதுபவள மணிகள், பச்சை நிற மரகத மணிகளில் ஆபரணங்களை செய்தனர். கீழ்பவானி அருகே நல்லூர் பகுதியில் கிடைத்த ‘ஐநூற்றுவர்’ கல்வெட்டுகளும் இதை உறுதி செய்கின்றன. எலவமலை, சின்ன மோளப்பாளையம், கொடிவேரி, குமரிக்கல்பாளையம், லிங்காபுரம், நிச்சாம்பாளையம் ஆகிய இடங்களில் இரும்பு உருக்காலை இருந்ததற்கான தரவுகள் கிடைத்தன. சுமார் 1,300 சென்டிகிரேட் வெப்பம் மூலம் இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை அன்றே அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்” என்கிறார் பவானி ஆற்றங் கரைகளில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தொல்லியல் ஆய்வாளர் யதீசுகுமார். இரும்பு, கீழ்பவானி அணை, தொப்பம்பாளையம், கரிதொட்டம் பாளையம், பங்களாபுதுர் பகுதியின் வடக்கு மலைப்பகுதி ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
வார்ப்பு இரும்பு செய்ய தனி நிபுணத்துவம் வேண்டும். 1300 சென்டிகிரேடில் இரும்பை உருக்கி அதே வெப்ப நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கவேண்டும். இத்தகைய நிபுணத்துவத்தை தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில், எஃகும், வார்ப்பு இரும்பும் மேலை நாடுகளுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டு அன்னியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது தெரியவருகிறது.
கொங்கு நாட்டில் இரும்பு காய்ச்சி எடுக்கும் தொழிலைச் செய்துவந்தனர். இரும்புத்தாது மணலைக் கரியுடன் கலந்து உலையில் கொட்டி ஊதுவை (துருத்தி) மூலம் இரும்பைக் காய்ச்சி எடுப்பர். ஒரு முறை காய்ச்சிய இரும்பை எடுத்தபின் மீண்டும் உலையை எரியச் செய்து சுமார் 825 மில்லி லிட்டர் கரியுடன் 550 மில்லி லிட்டர் தாது மணலைப் போட்டு உலையில் இரும்புக் கட்டியை எடுப்பர். ஒவ்வொரு இரும்பு உலைக்கும் நான்கு பேர்கள் பணியாற்றுவர். இரும்புக்கட்டியைப் பிளந்து கொல்லர்கட்கு இரும்பை விற்பர். அவர்கள் அதை கருவியாகச் செய்வர்.

இப்படியாக இரும்புத் தொழில்நுட்பத்தில் திறமை மிக்கவர்களாகத் தமிழக மக்கள் திகழ்ந்துள்ளது போல் ஆடை நெய்வதிலும், சங்கு அறுப்பதிலும் நீர்ப்பாசனத்திலும் தமது தொழில்நுட்பத்திறனைக் கொண்டிருந்தனரென்பதை எண்ணற்றத் தொல்லியல் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.

#கடைச்சங்கத்தில்கொங்குகலாச்சாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *