பேரொளி அறிதல்

soul

நிலத்தின் கூறுகள் உடலே ஆயின்
இறையின் கூறுதான் ஆன்மா வாகும்
உடலும் உள்ளமும் இருத்தலை நிறைப்பினும்
இயக்கும் கூறுதான் உயிரே ஆகும்.!

உயிரின் தன்மை எங்ஙனம் அறிவோம்?
நிலைபெறச் செய்தல் உயிரின் தன்மையாம்
உடலில் இருந்து உயிரினை நோக்கின்
உயிரின் தன்மை அளவிட முடியாது.!

ஆன்மாவில் இருந்து உயிரினை நோக்கின்
உயிரின் ஆற்றல் அளத்தல் எளிதே
வெம்மையின் தீச்சுடர் சிறு-கனல் முதலாய்
கோடானு கோடி ஒளியின் பெருக்கமாய்.!

உடலை இயக்கும் உயிரைப் போலே
ஆன்மாவை இயக்கல் உயிரின் கடமை
உடலையும் ஆன்மாவையும் உணர்தல் எளிது
ஆயினும் உயிரினைக் காணுதல் அரிது.

ஆன்மாவில் ஒளியினைக் காணுதல் எளிது
கட்டற்ற ஆற்றல் உடலினும் பெரிது
ஆன்மாவின் உயிரும் உடலின் உயிரும்
உயிருக் குயிராய் விளங்குதல் காண்போம்.!

அவயங்கள் இணைகையில் உடல் உருவாகும்
உடலின் ஊடாய் சக்தித் தீவுகள்
தீவுகள் தொடராய் இணைப்புகள் பெறுகையில்
ஒப்பிலாப் பேரொளி ஆன்மாவைக் காணுவோம்.!

இணைப்புகள் பெறுதல் முயற்சியால் ஆகும்
சிந்தனை தருக்கம் இணைப்பைப் பெருக்கும்
உடலும் வலியால் தவித்துதான் போகும்
ஆயினும் இவற்றால் உடல்மனம் இணையும்.!

உயிரின் இயற்கை பொதுவான வரையில்
மின்னொளி தருவிக்கும் தீப்பொறி ஆகும்
இப்பொறி இயங்கி தடைகள் தகர்கையில்
மலங்கள் நீங்கி புத்தொளி தோன்றும்.!

இச்சுடர் தானோ இறைவன் ஆகும்?
இத்தனை இன்பம் எவற்றில் அடைந்தோம்?
இன்பங்கள் யாவும் புறத்தில் இல்லை
உடலில் ஆன்மாவில் உயிரை உணர்தலில்.!

 

வாழ்த்துக்களுடன்,
முனைவர். அ. ஆனந்த்.