சூதுபவளமும் – கொரிய நாடும்!

 

பவள சங்கரி

சங்க இலக்கியத்தில் ‘துகிர்’ என்ற சொல் பவளத்தைக் குறிக்கிறது. பொன், முத்து, மணி ஆகியவற்றோடு பவளத்தையும் சேர்த்து அணிகலன் செய்தனர். பவளத்தை அணிகலன்களில் சேர்த்து அணிவதில் பழந்தமிழர் பெரும் விருப்பம் கொண்டிருந்தனர் என்பதை வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது. கொங்கு நாட்டில் அகழ்வாராய்வில் அதிகமாகக் கிடைக்கும் ‘கார்னீலியன்’ என்னும் மணிக்கல் பவளம் போன்று இருப்பதால் அதனைச் சூதுபவளம் என்பர். கொரிய நாட்டிற்குச் சென்ற இளவரசி எடுத்துச் சென்றதும் இந்த சூது பவளம்தான் . கொங்கு நாட்டில் இயற்கையாகவே பலவண்ண மணிக்கற்கள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து பாசியும், மணிக்கற்களும் செய்தது போல கடல் சங்குகளைக் கொண்டு செய்த அணிகலன்களும் அகழாய்வில் கிடைக்கின்றன. செம்மை நிறம் கொண்ட பவளத்தால் செய்யப்பட்ட அணிகலன்களும் பல கிடைத்துள்ளன.


சூதுபவளம்


அணிகலன் செய்ய கடல்கரையிலிருந்து பவளத்தைக் கொண்டுவந்து ‘வினை மாண் அருங்கலம்’ செய்ய உதவியவர்கள் பவளர், பவளன் என்று பெயர் பெற்றிருக்கலாம். பவளத்தான் என்ற பெயர் ஆவணங்களில் கிடைத்திருப்பதும் இக்கருத்திற்கு வலுச்சேர்க்கிறது என்கிறார் கல்வெட்டு துறை ஆய்வாளர், கல்வெட்டு – தொல்லியல் துறை முன்னாள் தலைவர், புலவர் செ. இராசு. ‘பவளகுல வாணவராயர்’என்ற குலத்தார் பற்றிய குறிப்புகள் கொடுவாய், அன்னூர் போன்ற கல்வெட்டுகளில் உள்ளன. கம்பர் பாடிய முதல் பாடலில் பவளகுலம் செம்பவளன் என்று இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
#கடைச்சங்கத்தில்கொங்குகலாச்சாரம்