கவிதை : மாமழை நீ வர வேண்டும்

மாமழைத் தீண்டல் நிலமகள் விருப்பமாய்
தேன்மழை பொழிந்து வாட்டத்தைப் போக்கவே
ஆருயிர் அனைத்தும் தழைக்கச் செய்கையில்
உயிர்த்துளி மழைத்துளி வருகென அழைத்தோம்!.

புற்கள் பலவும் துளிர்த்திட வேண்டி
புழுக்களை உணவாய்ப் பறவைகள் உண்டு
பூச்சியின் ஒலிகள் கானகம் ஒலித்து
விளைச்சல் பெருகி மங்களம் தருகவே!

வெயிலின் தாக்கம் நோய்கள் நீங்கி
குறைகள் தீர்ந்து புத்துயிர் பெற்று
பச்சைப் பட்டாடை அழகாய் உடுத்தி
விருப்பத்துடன் நோக்க பூமித்தாய் மலர்கவே!

ஆவினம் கானகம் உழவும் சிறக்க
பல்தொழில் பெருகி பாமரர் வளர
வறுமையின் தீவினை நீங்கியே மகிழ
மாமழை உனையே வாவென அழைத்தோம்!

கூப்பிடும் மந்திரம் மறந்து போனோம்
தூதராம் ஆறும் மரமும் கொடிகளும்
மாந்தர் எமது ஆசைத் தீயில்
பொசுங்கி மடிந்து தடமற்றுப் போனதே!

மாமழை பொன்மழை நீவர வேண்டும்
வருகையில் தீமைகள் அகலவே வேண்டும்
படைப்பின் உருவாய் இறையாய் அமைவதால்
யாவரும் போற்றியே வருகென அழைத்தோம்!

——————————————————————–
எழுத்தாக்கம்:
முனைவர். அ. ஆனந்த்.