Lost your password?...

கமல்ஹாசனினுள் நிறம் கறுப்பா? காவியா? – கருத்து பகிர்வு

–  முனைவர். செ. அன்புச்செல்வன் (இலந்தைமரத்தான்), மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom)

கமல் என்னும் ஆளுமையைக் கண்டும், தமிழ்வல்லார் சிலரின் பரிந்துரைகளைக் கேட்டும், இன்றுள்ள அரசியற்ச்சூழல்களைக் கருத்தில் கொண்டும்தான், கமல்ஹாசன் ஆளவந்தா(ன்)ல் நன்றாகயிருக்குமென்று எண்ணினேன். இன்று பகுத்தறிவுக் கறுப்பு வெளுத்துக் காவி சிரிப்பதைக் கண்ணுறுகின்ற போது, கமல் என்பவர் ஒரு பெருநடிகன் மட்டும்தான், அதைத்தாண்டி அவரிடத்தில் அறம் போன்றவை ஏதுமில்லை என்றுணர்ந்து ஒப்புக்கொள்கிறேன். 1990 களில், உடுமலை ரெட்டியபட்டி பிரிவு மேட்டில் “தேவர்மகன்” படத்தில் வரும் கடைசி ஐயனார் கோவில் காட்சி படம் பிடிக்கப்பட்டு முடிந்த தருவாயிலும், பொள்ளாச்சி- ஆனைமலை, உப்பாற்றங்கரைக்குப் பக்கத்தில் எடுக்கப்பட்ட “இந்தியன்” படப்பிடிப்பு முடிந்த தருவாயிலும், அங்கே கூடியிருந்த வெறும் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்து ஒரு சிறு வணக்கம் கூடச் சொல்லாமல் செருக்கு மிகுந்து கார் ஏறிச்சென்ற நடிகர் கமல்ஹாசன், இன்றும் அதே எண்ணப்பாட்டில்தான் இருக்கிறார் என்று நினைக்கவேண்டியிருக்கிறது.

“தன்னுள்ளிருக்கும் கறுப்புக்குள் காவியும் இருக்கலாம் என்ற கமலின் கருத்து அறிவியலாகச் சொன்னால் சுத்த வடிகட்டிய பொய். உலகில் இருப்பவை இரண்டே இரண்டு நிறங்கள்தாம். ஒன்று வெள்ளை இன்னொன்று கறுப்பு. தூய்மைக்கு இலக்கணமென்று சொல்லப்படும் வெள்ளையில்தான் ஏழு நிறங்கள் (VIBGYOR) அடங்கியிருக்கின்றன. ஆனால் வெள்ளையைத்தான் தூய்மைக்கு அடையாளமாய், நிர்மலம் என்றும், உளத்தூய்மைக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அழுக்கு என்று கருதப்படும், கறுப்புக்குள் வேறு நிறங்கள் இல்லை. ஆகவே கறுப்புதான், வெகுதூய்மை க்கு உவமையாக அறிவியல் சொல்லுகிறது. தன்னுடைய கறுப்புக்குள் காவி இருக்கிறது என்று சொல்கிறார் கமல். அப்படியானால் முதலில் காவிச்சாயத்தோடு இலங்கிக் கொண்டிருந்தவர் நம்மை ஏமாற்றுவதற்காக கறுப்புச் சாயம் பூசிக் கொண்டிருக்கிறார். நாளடைவில் மேலிருந்த கறுப்பு கரைந்துபோனதால் காவி வெளியே தெரிந்திருக்கலாமேயொழிய, கறுப்புக்குள் காவி இருக்கவே இருக்க முடியாது.

செ. அன்புச்செல்வன்
23/09/2017

ஒப்புதல் மற்றும் நன்றி!: இந்த எழுத்தாக்கம் (படைப்பு) முனைவர். செ. அன்புச்செல்வன் அவர்களுடையது என்பதை கொரிய தமிழ் தளம் வலைதளத்தின் ஆசிரியர் குழு ஒப்புமை செய்கிறது. அவ்வாறே! முனைவர் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கி கொரிய தமிழ் தளம் பாராட்டுகிறது.

ஆசிரியர் குறிப்பு: முனைவர். செ. அன்புச்செல்வன் சிறந்த இளம் வேதியியல் அறிவியலாளர். அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஆங்கில அறிவியற்பதங்களை தமிழில் எளிய முறையில் ஆக்கம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom)-யில் மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். முனைவர். செ. அன்புச்செல்வன் அவர்களின் மற்ற பதிவுகளை இங்கு காணலாம். http://vethiyanban.blogspot.kr/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *