Lost your password?...

எங்களைப் பற்றி

 கொரிய தமிழ் தளம் – தொடக்கம் மற்றும் நோக்கம் (Introduction and Objectives)

 

அன்புடையீர்!

வணக்கம்!

வைகாசி 10, திருவள்ளுவர் ஆண்டு 2047 முதல் (23.05.2016) முதல், தமிழ் தளம் – கொரியா (Korea Tamil Forum) தனது பணியினை தொடங்குகிறது. இவ்வமைப்பு கொரியவாழ் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் வாழ்வியல் தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்ளும் தளமாக செயல்படும். நமது, கலை மற்றும் பண்பாட்டுக்கூறுகளை தக்க வகையில் நமது கொரிய மற்றும் பிற நாட்டு தோழர் தோழியரும் அறிந்து பங்குகொள்ளும் வகையிலான பணிகளை முன்னெடுக்க தமிழ் தளம் அணியமாய் இருக்கிறது. விழாக்கள் நடத்துவது நாம் நோக்கமல்ல. தேவைக்கேற்ப பயனுள்ள கூடுதல்களை ஒழுங்குசெய்ய தமிழ் தளம் – கொரியா முயற்சி எடுக்கும். குறிப்பாக குழந்தைகள் தொடர்பான விடயங்களுக்கு சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படும். உலகில் தமிழை நேசிக்கும் அனைவருக்கும் அனைத்துவகையிலும் இந்த தளம் உரித்தானது. இந்த முயற்சியில் பங்கு கொண்டு தங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுமாறு கொரியவாழ் தமிழ் நெஞ்சங்களை பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.


Center map
Traffic
Bicycling
Transit

கொரியா தமிழ் தளத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் (Guiding principles of Korea Tamil Forum)

 

வழிகாட்டு நெறிமுறை 1 – கருத்துப்பரிமாற்றம்

தமிழ் தளம் – கொரியா முகநூல் பக்கத்தில் அனைவருக்கும் முழு கருத்துரிமை உண்டு. நமக்கு தேவையன நல்ல தகவல்களை பகிர்வதே நமது முதன்மை நோக்கம். வாழ்வியல், கலை, பண்பாடு மற்றும் இன்னபிற இன்றியமையா விடயங்களை இங்கு தோழர்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளலாம். மிகவும் கடினமான சமுக மற்றும் அரசியல் சிக்கல்கள் குறித்த கருத்தாடல்களை தொடங்கி வைப்பவர் பொறுமையுடன் கண்ணியமாக கையாள வேண்டும். சில நேரங்களில் பலரும் சட்டென சினம் கொள்ளலாம், அவ்வாறு நிகழ்ந்தால் தளத்தில் கலந்துரையாடலை முன்வைப்பவர் கண்ணியமாக தகுந்த தரவுகளுடன் விளங்கப்படுத்தவேண்டும். தங்களால் திறம்பட கையாள முடிகிற விடயங்களை முன்வைப்பது சிறந்தது. எப்போதும் தனிநபர் தன்மதிப்பை பாதிக்காதவாறு கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

 

வழிகாட்டு நெறிமுறை 2 – கூடுதல்கள்

கொரியாவில் நமது வாழ்வியல் குறித்த தகவல்களை வழங்கி நமது கலை, உணவு, மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய கூடுதல்களை ஒருங்கிணைக்க தமிழ் தளம் – கொரியா அணியமாய் இருக்கிறது. இவற்றில் மகளிரின் தலைமைத்துவ பங்களிப்பை நாம் வரவேற்கிறோம். அதனை தேவைப்படும் முன்னெடுப்பு உதவிகள் மூலம் ஊக்கப்படுத் துவோம். குழந்தைகளின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு குறித்த சுவையான நிகழ்வு பகுதிகளை உரிய வகையில் இனைத்துக்கொள்வோம். மற்றபடி கொண்டாட்ட விழாக்கள் நடத்துவது நமது நோக்கமல்ல. கூடுதல்களின் கால இடைவெளி மற்றும் அளவுகள் ஆகியவற்றை தேவை அடிப்படையில் அனைவருடனும் (இந்த முகநூல் பக்கத்தில்) கலந்துரையாடி தீர்மானிப்போம்.

 

வழிகாட்டு நெறிமுறை 3 – வெளியுறவு மற்றும் ஊடக தொடர்பு

கொரியாவில் உள்ள நாம் சார்ந்த பிற அமைப்புகளுடன் உள்ளார்ந்த நட்புறவை தமிழ் தளம் – கொரியா முன்னெடுக்கும். தேவையான பொழுது அவர்களுடன் இனைந்து பணியாற்றுவோம். அதற்கு களமும் காலமும் வாய்க்கவில்லையெனில் பார்வையாளராய் பயணிப்போம். எப்பொழுதும் முரண்பாட்டைத் தவிர்ப்போம். வெளி மற்றும் ஊடக தொடர்புக்கென ஆர்வமும் மொழி ஆளுமையும் உள்ள தோழர் தோழியரை தெரிவு செய்வோம்.

 

வழிகாட்டு நெறிமுறை 4 – ஆளுமை

பின்வரும் இரண்டு ஆளுமை கட்டமைப்புகள் நமது அமைப்பை வழி நடத்திச்செல்லும்.

1.ஒருங்கிணைப்புக்குழு
2. வழிகாட்டுதல் குழு

 

பாசத்திற்குரிய இளையோர்கள் ஆட்புல ஒருங்கிணைப்பு, உள்ளக தொடர்பாடல் மற்றும் களச் செயல்பாடு ஆகியவற்றை முன்னின்று செய்வார்கள். பொறுப்பேற்கும் ஒருங்கிணைப்புக்குழு ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றும். இந்தகால அளவிற்குப்பிறகு தற்போதைய ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்களை கண்டறிந்து பணிகளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வழிகாட்டுதல் குழுவில் இணைந்து கொள்வார்கள்.

 

மதிப்பிற்குரிய மூத்தோர்கள் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறுவார்கள். வழிகாட்டுதல் குழு ஒருங்கிணைப்பு குழுவிற்கு தேவையான அறிவுரை மற்றும் உதவிகளை வழங்கி பலம் சேர்க்கும் பணியை செய்யும்.

ஒருங்கிணைப்பு குழுவும் வழிகாட்டுதல் குழுவும் இணைந்து செயற்குழுவாக இயங்கி முடிவுகளை எடுக்கும்.

 

வழிகாட்டு நெறிமுறை 5 – மதிப்பீடு மற்றும் சரிசெய்தல்

நமது குழு பற்றிய மதிப்பீடுகளை இந்த பக்கத்தில் தோழர் தோழியர் எப்போதும் நேரடியாக முன்வைக்கலாம். தங்கள் மதிப்பீடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.

 

தமிழ் தளம் – கொரியா-வின் தொடக்கப்பணிகளுக்கு உதவிக்கரம் வழங்கிய அணைவருக்கும் நன்றி!

 

இங்ஙனம்
கொரியா தமிழ் தளம் (koreatamilforum)